MANGO GINGER
மா இஞ்சி ஊறுகாய்
மா இஞ்சி. உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வேன். மாங்காய் இஞ்சி பற்றிய முக்கியக் குறிப்புகள் தேடிக் கொண்டிருந்த போது குமுதம் ஹெல்த்தில் இக்கட்டுரை கிடைத்தது. மாங்காய் இஞ்சியின் மகத்துவம் பற்றித் தெரியாதவர்களுக்கு உபயோகப்படுமே என்பதால் இங்கு பதிவிடுகிறேன். இப்பதிவு படிப்பவர்களுக்கு உபயோகமாய் இருக்குமென்று நம்புகிறேன். நன்றி : குமுதம் ஹெல்த்
இனி மாங்காய் இஞ்சி பற்றிய கட்டுரை
இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து என்பது யாவருக்கும் தெரியும். மாங்காய் இஞ்சியும் பல மருத்துவக் குணங்கள் கொண்டது என தாவரஇயல் வல்லுனர்களும், மருந்தியல் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளார்கள்.
மாங்காய் இஞ்சியின் தாவர இயல் பெயர் ‘குர்குமா அமேடா’ இது இஞ்சி பெரேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் ‘‘மாங்கோ ஜிஞ்சர்’’ என்று பெயர். இஞ்சியைப் போன்று மாங்காய் இஞ்சியின் தாயகமும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ் டிரா, ஆந்திரா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
பயன்பெறும் பாகம்:
இச்செடியின் மண்ணிற்குக் கீழ் உள்ள தண் டுக்கிழங்குதான் நாம் பயன் படுத்தும் மாங்காஇஞ்சி. இதை தாவரவியலில் ரைசோம் என்று அழைக்கிறார்கள்.
பெயர் வந்த விதம்:
மாங்காயைப் போன்று வாசனையும், இலேசான இஞ்சிச்சுவையும், இஞ்சியைப் போன்று உருவமும் கொண்டதால், தாவர இயல் நிபுணர்கள் தமிழில் இதற்கு ‘மாங்காய்இஞ்சி’ என்று மிகப் பொருத்தமாக பெயர் சூட்டியுள்ளார்கள்.
அடங்கியுள்ள சத்துப் பொருள்கள்:
நாம் சாப்பிடும் மாங்காய் இஞ்சியில் புரதம், மாவுப் பொருட்கள், கொழுப்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ப்பொருட்கள், வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ அடங்கியுள்ளன.
மாங்காய் வாசனையின் காரணம்:
மாங்காய் இஞ்சியிலுள்ள மாங்காய் வாசனைக்கான காரணம் இதில் உள்ள சீஸ் - ஓசிமென், டிரான்ஸ் டை ஹைட்ரோசிமின், மிர்சீன் ஆல்பா முதலிய வேதிப் பொருட்கள் ஆகும். இதில் அடங்கி உள்ள ‘குர்குமின்’ என்ற வேதிப்பொருள் இதற்கு மிக லேசான மஞ்சள் நிறத்தைக் கொடுக்கிறது. இதிலுள்ள ஒரு வகை ஒலியோரெசின், போர்னியால், ஆர்டர்மிரோன் இவை இஞ்சியின் சுவையை அளிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
’மாங்காய் இஞ்சி’ புதுமொழிகள் மாதா ஊட்டாத சோறை மாங்காய் இஞ்சி ஊட்டும்.வாய்ப்புண்ணிற்கு தேங்காய் வயிற்றுக்கோளாறுக்கு மாங்காய் இஞ்சி!கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பாங்கான மருந்து மாங்காய் இஞ்சி!
மருத்துவப் பயன்கள் ஏதாவது ஒருவகையில் மாங்காய் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்கும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும். இயற்கையிலேயே கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர் களுக்கு, இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டமாக நறுக்கி சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது சாலச்சிறந்தது.
வயிற்றிலுள்ள தீமைதரும் பூச்சிகளை அழித்து மலத்துடன் வெளியேற்றும் தன்மை மாங்காய் இஞ்சிக்கு உண்டு. வயிறு, குடல் பகுதிகளில் பூசணங்களை அறவே ஒழிக்கும். சுருங்கச் சொன்னால் மாங்காய் இஞ்சி ஒரு சிறந்த இயற்கை வயிற்றுக் கழுவி ஆகும். மாங்காய் இஞ்சியை துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லையை வேரறுக்கும். உணவு செரியாமையை சீர்செய்யும். நன்கு பசி ருசி ஏற்படுத்தும்.
குண்டான உடல்வாகு உள்ளவர்கள் மாங்காய் இஞ்சியை தொடர்ந்து சமையலில் சேர்த்து வர, உடல் எடை கணிசமாகக் குறையும் என ஜெர்மனியில் மேற்கொண்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.
வயிற்று உப்புசத்திற்கு ஒரு எளிய இயற்கை மருந்து மாங்காய் இஞ்சி. சரும நோய் வராது காக்கும் குணமுடையது. சிலவகை டானிக்கு களில் இதன் சாறு ஒரு உபபொருளாகச் சேர்க்கப்படுகிறது.
மாங்காய் இஞ்சி ஒரு வலி நிவாரணி. குடல் வலிக்கு மிகவும் சிறந்த இயற்கை மருந்து. மூட்டுவலியைத் தணிக்கும். வெங்காயத்துடன் மாங்காய் இஞ்சியையும் சேர்த்து சாலட் ஆக சாப்பிட்டுவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
குளிர்காலத்தில் மாங்காய் இஞ்சியை தாராளமாய் உணவில் சேர்த்துக் கொண்டால் குளிர் உடம்பைப் பாதிக்காது காக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.
மாங்காய் இஞ்சியை சிறிய வட்டத் துண்டுகளாக நறுக்கி, சீரகத்தூள் தூவி சாலட்டாக சாப்பிட்டு, ஒரு தம்ளர் மோர் குடித்தால் பித்தம் குணமாகும்.
மாங்காய் இஞ்சி ரெசிபீஸ்
1. மாங்காய் இஞ்சி சாலட் :
மாங்காய் இஞ்சியை மெல்லிய வட்டத்துண்டுகளாக நறுக்கி, சிறிது எலுமிச்சம் பழச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாலட்டாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
2. துவையல் :
மாங்காய் இஞ்சி, பச்சைமிளகாய், வெள்ளைப்பூண்டு, தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
3. மாங்காய் இஞ்சி சட்னி:
சட்னி செய்து இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பத்துடன் சேர்த்து உண்ண சுவையோ சுவை.
4. மாங்காய் இஞ்சி தயிர்ப் பச்சடி :
தயிர்ப் பச்சடி தயாரித்து, சைட்டிஸ் ஆக பயன்படுத்தலாம்.
5. மாங்காய் இஞ்சி கறி :
மாங்காய் இஞ்சியை துண்டுகளாக நறுக்கி, சிறிது நல்லெண்ணெயில் வதக்கி எடுத்து, அத்துடன் சீரகம், வத்தல், வெள்ளைப் பூண்டு, உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இத்துடன் சிறிது புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். இந்தக் கறியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவைக்கு சுவை, சத்துக்கு சத்து.
6. மாங்காய் இஞ்சி ஊறுகாய் :
நறுக்கிய மாங்காய் இஞ்சியுடன் மிளகாய்த்தூள், எலுமிச்சைசாறு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊறுகாய் செய்து அவ்வப்போது பயன்படுத்தலாம்.
7. மாங்காய் இஞ்சி தொக்கு :
சிறு சிறு துண்டுகளாக்கிய மாங்காய் இஞ்சியை மிக்ஸியிலிட்டு தொக்கு பதத்தில் அரைத்து எடுக்கவும். இத்துடன் சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய் வத்தல்கள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் சேர்த்து வேகவைத்து இறக்கவும். மாங்காய் இஞ்சி தொக்கு ரெடி. எல்லாவகை சாதத்துடனும் தொட்டுக் கொள்ள சுவையோ சுவை.
8. மாங்காய் இஞ்சி புலவு :
பாசுமதி அரிசியை உதிரியாக வேகவைத்து எடுத்து, துருவிய மாங்காய் இஞ்சி, நெய், உப்பு சேர்த்து புலவு செய்து, வெங்காய தயிர்ப் பச்சடி சேர்த்து சாப்பிட, சூப்பர் சுவைதான்.
9. மாங்காய் இஞ்சி, வத்தக்குழம்பு :
மிளகாய் வத்தல், மாங்காய் இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுக்கவும். தேவையான புளிக் கரைசலில் இவற்றைச் சேர்த்து வத்தக்குழம்பு செய்து இறக்கவும். நன்கு சுவையானது இக்குழம்பு.
10. மாங்காய் இஞ்சி பக்கோடா :
சாதாரணமாக நாம் பக்கோடாவுக்கு மாவு சேர்க்கும்போது, மாங்காய் இஞ்சியைத் துருவி இட்டு நன்கு கலந்து பின்னர் பக்கோடா பொரித்து எடுக்கவும். இது சூப்பர் சுவையான பக்கோடா.