30 வகை பத்திய சமையல்
இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு
தேவையானவை: இளம் இஞ்சி 25 கிராம், பிஞ்சு பச்சை மிளகாய் 10, புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, அச்சு வெல்லம் ஒன்று, எண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி… புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இஞ்சி ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.
கறிவேப்பிலை மிளகு குழம்பு
தேவையானவை: கறிவேப்பிலை 2 கைப்பிடி அளவு, மிளகு 20, உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து… புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இந்தக் குழம்பு, பிரசவித்த பெண்களுக்கு மிகவும் நல்லது. மழை நேரத்தில் ஏற்படும் ஜுரம், உடல் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.
கீரை பொரித்த குழம்பு
தேவையானவை: முளைக்கீரை ஒரு சிறிய கட்டு, மிளகு 6, தனியா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, தேங்காய்த் துருவல் ஒரு சிறிய கிண்ணம், சீரகம் ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு 4 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய்த் துருவல், தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கீரையை நன்கு கழுவி, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். பருப்பும் கீரையும் வெந்த பிறகு உப்பு சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, கீரையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்துடன் இதை சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிட்டால், சுவையில் அசத்தும். இதற்கு, மாங்காய்ப் பச்சடி சிறந்த காம்பினேஷன்.
தத்துவப் பச்சடி
தேவையானவை: வேப்பம்பூ ஒரு கைப்பிடி அளவு, மாங்காய்த் துண்டுகள் (சற்றே பெரியது) இரண்டு, வெல்லம் 50 கிராம், பச்சை மிளகாய் (சிறியது) ஒன்று, கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: மாங்காய்த் துண்டுகளை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வேப்பம்பூவை சேர்த்து வறுக்கவும். வெந்த மாங்காய்த் துண்டுகளை இதில் கரைத்துவிடவும். பிறகு, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: ‘வாழ்க்கை என்பது கசப்பு, இனிப்பு, புளிப்பு எல்லாம் கலந்தது’ என்ற தத்துவத்தை உணர்த்தும் இந்தப் பச்சடி, தமிழ்ப் புத்தாண்டு அன்று முக்கிய உணவாக பரிமாறப்படுகிறது.
கண்டதிப்பிலி ரசம்
தேவையானவை: கண்டதிப்பிலி (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) 10 கிராம், மிளகு, தனியா, கடுகு, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, புளி சிறிய நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும். இத னுடன் புளி, உப்பு சேர்த்து விழுதாக அரைத்து, நீர் விட்டு நன்கு கரைத்து கொதிக்கவைக்கவும். இதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து… கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
குறிப்பு: இந்த ரசம், உடல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். பருப்புத் துவையல் இதற்கு சிறந்த காம்பினேஷன்.
மணத்தக்காளி வற்றல் குழம்பு
தேவையானவை: உப்பில் ஊறவைத்து, காயவைத்த மணத்தக்காளி வற்றல் 25 கிராம், காய்ந்த மிளகாய் 2, புளி ஒரு எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி 4 டீஸ்பூன், வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு சிறிதளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, மணத்தக்காளி வற்றலை சேர்த்து வறுத்து, சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும். இதில் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: மழைக்கால இரவில் சூடான சாதத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால்… அருமையான ருசியுடன் இருக்கும். சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிடலாம். மணத் தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை ஆறவைக்கும்.
பூண்டு மிளகு சீரக ரசம்
தேவையானவை: பூண்டு 6 பல் (தோல் உரித்தது), புளி ஒரு சிறிய எலுமிச்சை அளவு, கடுகு, மிளகு, சீரகம், துவரம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பூண்டு, மிளகு, சீரகம், துவரம்பருப்பு ஆகியவற்றை சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். புளியை நீரில் கரைத்து, அதில் அரைத்ததை சேர்த்துக் கலந்து உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யில் கடுகு, பெருங் காயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: காய்ச்சல் ஏற்படும் சமயத்தில் புழுங்கல் அரிசியை வறுத்து, ரவை போல உடைத்து குழைவாக வேகவைத்து, இந்த ரசத்தை ஊற்றிக் கரைத்து குடித்தால்… உடல் வலி, சோர்வு நீங்கும்.
இஞ்சி பிரண்டை துவையல்
தேவையானவை: இளம் தளிரான கொழுந்துப் பிரண்டைத் துண்டுகள் ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி ஒரு சிறிய துண்டு, புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பிரண்டையைப் பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக நல்லெண்ணெய் விட்டு வறுக்கவும். வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சிறிது அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
குறிப்பு: பிரண்டை, இஞ்சி ஜீரண சக்தியைத் தரும். வாயுத்தொல்லை நீங்கும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால்… அசத்தல் சுவையில் இருக்கும். சுட்ட அப்பளம், வடகம் இதற்கு நல்ல காம்பினேஷன்.
பூண்டு வடகம் குழம்பு
தேவையானவை: பூண்டு 100 கிராம், கூட்டு வடகம் 100 கிராம், சின்ன வெங்காயம் 20, வெந்தயம், கடுகு தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, சாம்பார் பொடி 4 டேபிள்ஸ்பூன், புளி ஒரு எலுமிச்சம்பழ அளவு, நல்லெண்ணெய் 50 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கூட்டு வடகம், கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு… வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி… இதனுடன் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு, புளியைக் கரைத்து விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும்.
குறிப்பு: இதயத்தைக் காக்கும் சிறந்த மருத்துவக் குணம் பூண்டுக்கு உண்டு. இதயக் கோளாறு உள்ளவர்கள், அடிக்கடி பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பூண்டுப்பொடி
தேவையானவை: உளுத்தம்பருப்பு 4 டீஸ்பூன், பூண்டு 100 கிராம் (தோல் உரிக்கவும்), காய்ந்த மிளகாய் 6, எண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பூண்டு ஆகியவற்றை எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும் (ரொம்ப மசியக்கூடாது).
குறிப்பு: இந்த பூண்டுப் பொடி இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட மிகவும் ஏற்றது. பூண்டு, இதயக் கோளாறு வராமல் தடுப்பதுடன், வாயுத் தொல்லையையும் நீக்கும்.
அப்பளக் குழம்பு
தேவையானவை: புளி பெரிய நெல்லிக்காய் அளவு, சின்ன பூண்டு பல் 10, சின்ன வெங்காயம் 10, உளுந்து அப்பளம் 2, காய்ந்த மிளகாய் ஒன்று, சாம்பார் பொடி 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் தலா கால் ஸ்பூன், நல்லெண்ணெய் 6 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து… வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, அப்பளத்தை பிய்த்து துண்டுகளாக்கி சேர்க்கவும். பின்னர் சாம்பார் பொடி போட்டு வதக்கி, புளித் தண்ணீரை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
வல்லாரைத் துவையல்
தேவையானவை: வல்லாரைக்கீரை ஒரு கட்டு, தேங்காய்த் துருவல் 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, புளி சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிள காய், உளுத்தம்பருப்பை சிறி தளவு எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயில் வல்லாரைக் கீரையை வதக்கிக்கொள்ளவும்.இவை ஆறியவுடன் தேங்காய்த் துரு வல், புளி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து அரைக்கவும்.
குறிப்பு: வல்லாரைக்கீரை, ஞாபகசக்திக்கு மிகவும் நல்லது.
மூலிகைப்பொடி
தேவையானவை: சுக்கு ஒரு சிறிய துண்டு, சுண்டைக்காய் வற்றல் 10, வேப்பம்பூ, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகு 2 டீஸ்பூன், கடுகு 2 டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சிறிய துண்டு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: கடுகு, சுக்கு, சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப்பிலை, மிளகு, பெருங்காயம் எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
செய்முறை: இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்தப் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. கடுகு சளித் தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும், சுக்கு ஜீரணசக்திக்கு நல்லது, வேப்பம்பூ பித்தத்தை தணிக்கும், கறிவேப்பிலை இரும்புச்சத்து மிகுந்தது, மிளகு ரத்த சுத்திகரிப்புக்கு உதவும், பெருங்காயம் வாயுத்தொல்லை நீக்கும்.
வேப்பம்பூ சாதம்
தேவையானவை: அரிசி 200 கிராம், வேப்பம்பூ ஒரு கைப்பிடி அளவு, மோர் மிளகாய் 4, கடுகு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் இரண்டு டீஸ்பூன், நெய் சிறிதளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயை கிள்ளிப்போட்டு… வேப்பம்பூவையும், பெருங்காயத்தூளையும் சேர்த்து வறுக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு சாதம் வைத்து, அதில் வறுத்த வேப்பம்பூ கலவை, உப்பு சேர்த்து, நெய் விட்டு நன்கு கலந்து சூடாக சாப்பிட்டால்.. நாவுக்கு ருசியாக இருக்கும்.
குறிப்பு: வேப்பம்பூ… பித்தம், தலைசுற்றல் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேப்பம்பூ சீஸனில் அதை சேகரித்து, காயவைத்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய் பச்சடி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் 4, இஞ்சி விழுது அரை டீஸ்பூன், புளிக்காத தயிர் 100 மில்லி, பெருங்காயத்தூள் சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பெரிய நெல்லிக்காயை சீவி, கொட்டையை எடுத்துவிட்டு மிக்ஸியில் அரைக்கவும். நெல்லிக்காய் விழுது, இஞ்சி விழுதை தயிரில் கலந்து, உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: நெல்லிக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ரத்தசோகை உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தலாம். நெல்லிக்காயில் துவையல், அல்வா, போளி, ஜாம் என்று பலவிதமாக தயாரித்து ஒவ்வொரு ருசியிலும் பயன்பெறலாம்.
முடக்கத்தான் கீரை தோசை
தேவையானவை: புழுங்கல் அரிசி 200 கிராம், வெந்தயம், உளுத்தம்பருப்பு தலா 2 டீஸ்பூன், முடக்கத்தான் கீரை இரண்டு கைப்பிடி அளவு (கீரை விற்பவரிடம் கேட்டு வாங்கவும்), எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயத்தை ஒன்றாக ஊற வைத்து… ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முடக்கத்தான் கீரையையும் சேர்ந்து நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். மாவை தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து, லேசாக எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இட்லி மிளகாய்ப் பொடியை தோசையின் மேலே தூவி சாப்பிடலாம். முடக்கத்தான் கீரை… கால்வலி, மூட்டுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
ஓம லேகியம்
தேவையானவை: ஓமம் 25 கிராம், மிளகு 10 கிராம், சுக்கு ஒரு சிறிய துண்டு, அரிசி திப்பிலி 10, கண்டதிப்பிலி 10 கிராம், சித்தரத்தை, விரலி மஞ்சள் தலா ஒரு சிறிய துண்டு, வெல்லம் 150 கிராம், நெய் 100 மில்லி.
செய்முறை: ஓமம், மிளகு, சுக்கு, கண்டதிப்பிலி, அரிசி திப்பிலி, சித்தரத்தை, மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் போட்டு நன்கு பொடிக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, பாகு காய்ச்சி, செய்துவைத்த பொடியை சேர்த்துக் கிளறி, நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, ஆறிய உடன் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
குறிப்பு: வயிறு சரியில்லாத சமயத்தில் இந்த லேகியத்தில் இருந்து சிறிதளவு எடுத்து, உருண்டையாக உருட்டி அப்படியே சாப்பிடலாம்.
வாழைத்தண்டு கோஸ் மோர்க்கூட்டு
தேவையானவை: முட்டைகோஸ் கால் கிலோ, மிளகு 10, வாழைத்தண்டு இரண்டு துண்டுகள், காய்ந்த மிளகாய் ஒன்று, தயிர் ஒரு கப், கடுகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு. தேங்காய்த் துருவல் 4 டேபிள்டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு,
செய்முறை: கோஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாழைத்தண்டின் மேல்பட்டைகளை உரித்து, தோல் சீவி, வில்லை வடிவமாக நறுக்கி, நார் எடுத்து, பொடியாக நறுக்கவும். இதை கோஸுடன் சேர்த்து, உப்பு போட்டு வேகவிடவும். மிளகு, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் விழுதாக அரைத்து, வேகவைத்த கோஸ் வாழைத்தண்டுடன் சேர்க்கவும். இதனை சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி, தயிர் விட்டு கலக்கவும். மீதமுள்ள தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்க்கவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
குறிப்பு: வாழைத்தண்டு பித்தப்பையில் உள்ள கற்களை நீக்கும். நார்ச்சத்து உள்ளதால் இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. சூடான சாதத்தில் இந்த மோர்க்கூட்டு சேர்த்து, பொரித்த அப்பளம் தொட்டு சாப்பிட்டால்.. சுவை அள்ளும்.
பிடிகருணை மசியல்
தேவையானவை: பிடிகருணைக்கிழங்கு 6, இஞ்சி ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் ஒன்று, கடுகு, கடலைப்பருப்பு தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, வெல்லம் ஒரு சிறிய துண்டு, கொத்தமல்லித் தழை சிறிதளவு, எலுமிச்சம்பழம் ஒரு மூடி, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பிடிகருணைக்கிழங்கை வேகவைத்து தோல் உரிக்கவும். இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வெந்த கருணைக்கிழங்கை சிறிதளவு நீர் விட்டு நன்கு மசிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து, மஞ்சள்தூள் சேர்த்து, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்துக் கிளறி, மசித்த கருணைக்கிழங்கு, உப்பு சேர்க்கவும். இதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து, எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, நறுக்கிய கொத்த மல்லித் தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: நன்கு தோல் உலர்ந்த பழைய கிழங்கை வாங்கினால் அரிப்பு இருக்காது. பிடிகருணைக்கிழங்கு மூலநோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
புதினா கொள்ளு பொடி
தேவையானவை: புதினா, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகு ஒரு டீஸ்பூன், கொள்ளு 25 கிராம், தனியா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: புதினா, கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் வறுக்க வும். மிளகு, கொள்ளு, தனியாவை ஒன்றாக வறுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.
குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சாப்பிடலாம். புதினா வாசனையுடன் கொள்ளு, சேர்ந்து, வித்தியாசமான ருசி யுடன் இருக்கும்.
மல்டி மாவு மூலிகை சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, சோள மாவு தலா ஒரு கப், ஓமம் 2 டீஸ்பூன், எள் ஒரு டீஸ்பூன், வெற்றிலை ஒன்று, இஞ்சி ஒரு சிறிய துண்டு, பூண்டு 2 பல், துளசி இலை 10, புதினா, கொத்தமல்லித் தழை சிறிதளவு, நெய் 25 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, சோள மாவு மூன்றையும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். ஓமம், பூண்டு, வெற்றிலை, இஞ்சி, துளசி இலை, புதினா, கொத்தமல்லித் தழையை மிக்ஸியில் போட்டு நன்கு மசியும்படி விழுதாக அரைத்து மாவில் சேர்த்து… எள், சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். பிசைந்த மாவை சப்பாத்திகளாக திரட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சப்பாத்திகளைப் போட்டு, லேசாக நெய் தடவி வாட்டி எடுக்கவும்.
தூதுவேளை துவையல்
தேவையானவை: தூதுவளை இலை ஒரு கைப்பிடி அளவு, புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மீதமான தீயில் வைத்து, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். தூதுவளை இலையையும் வாணலியில் போட்டு வதக்கிக்கொள்ளவும். பின்பு இவற்றை ஒன்று சேர்த்து… உப்பு, புளி, பெருங்காயத்தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
குறிப்பு: தூதுவளை… இருமல், சளித்தொல்லைக்கு சிறந்த நிவாரணம் தரும். இந்த துவையலை சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
சுண்டைக்காய் துவையல்
தேவையானவை: காய்ந்த சுண்டைக்காய் வற்றல் 25 கிராம், காய்ந்த மிளகாய் 2, புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு,
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சுண்டைக்காய் வற்றலை பொன்னிறமாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். சிறிது மசிந்ததும், உப்பு, புளி, வறுத்த சுண்டைக்காய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
குறிப்பு: இந்தத் துவையல் வயிற்றுக்கோளாறுகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். சூடான சாதத்தில், துவையலை சேர்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். இதற்கு, சுட்ட அப்பளம் சூப்பர் காம்பினேஷன்!
கலவைக்காய் கூட்டு
தேவையானவை: கோஸ் துருவல் ஒரு கைப்பிடி அளவு, கத்திரிக்காய், கேரட், உருளைக்கிழங்கு, குடமிளகாய், தக்காளி தலா ஒன்று, பச்சை மிளகாய் 2, பாசிப்பருப்பு ஒரு சிறிய கிண்ணம், சீரகம் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 4 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை குழைய வேகவிடவும். சீரகம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவலை விழுதாக அரைக்கவும். எல்லா காய்களையும் பொடியாக நறுக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்க்கவும். பிறகு வெந்த பாசிப்பருப்பு, உப்பு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு. பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்து சேர்த்துக் கலந்து இறக்கவும்.
குறிப்பு: வீட்டில் சமைத்த பிறகு, காய்கள் கொஞ்சமாக மிகுந்து இருக்கும் சமயத்தில் இப்படி ஒரு கலவைக்காய் கூட்டு செய்யலாம்.
அகத்திக்கீரை பொரியல்
தேவையானவை: அகத்திக்கீரை ஒரு சிறிய கட்டு, பாசிப்பருப்பு ஒரு சிறிய கிண்ணம், பெரிய வெங்காயம் ஒன்று (பொடியாக நறுக்கவும்), உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, கடுகு அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் 2 டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: அகத்திக்கீரையையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, குறைவாக தண்ணீர் விட்டு வேகவிடவும். சிறிது வெந்ததும் உப்பு சேர்க்கவும். நன்கு வெந்த உடன் பிழிந்து தண்ணீரை வடிகட்ட வும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்துக் கிளறி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்த அகத்திக்கீரை பாசிப்பருப்பு சேர்த்து, தேங்காய்த் துருவல் தூவிக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: அகத்திக்கீரை, குடல்புண்ணுக்கு சிறந்த மருந்து.
தானிய உருண்டை மோர்க்குழம்பு
தேவையானவை: கொள்ளு, சோயா, துவரம்பருப்பு, சோளம் தலா 25 கிராம், மிளகு 10, இஞ்சி ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் ஒன்று, தயிர் 300 மில்லி, தேங்காய்த் துருவல் 4 டீஸ்பூன், வெந்தயம், தனியா, சீரகம், கடுகு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: கொள்ளு, சோயா, துவரம்பருப்பு, சோளம் ஆகியவற்றை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீர் வடித்து இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த பருப்பைப் போட்டு உருட்டும் பதத்தில் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை இட்லித் தட்டில் வைத்து வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, வெந்தயம், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து அரைத்து, தயிரில் கலக்கவும். வேகவைத்த பருப்பு உருண்டைகளை அதில் போட்டு… எண்ணெயில் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, லேசாக சூடாக்கி இறக்கவும்.
குறிப்பு: இந்தக் குழம்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. சூடான சாதத்தில் குழம்பு விட்டு உருண்டையை தொட்டுக்கொண்டும்… உருண்டைகளை சாதத்தில் போட்டு பிசைந்து, குழம்பு தொட்டுக்கொண்டும் விருப்பப்படி சாப்பிடலாம்.
கத்திரிக்காய் – முருங்கைக்காய் பொரியல்
தேவையானவை: பெரிய வெங்காயம் இரண்டு, பிஞ்சுக் கத்திரிக்காய் கால் கிலோ, முருங்கைக்காய், தக்காளி தலா 2, தனியா, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, கெட்டியான தேங்காய்ப்பால் அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் சிறிதளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: முருங்கைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மஞ்சள்தூள் சேர்த்து… நறுக்கிய தக்காளி, கத்திரிக்காய், முருங்கைக்காய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வறுத்துப் பொடித்த பொடி, தேவையான உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். கெட்டியானதும் தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறி இறக்கவும்.
அங்காயப் பொடி
தேவையானவை: கடுகு 25 கிராம், வேப்பம்பூ ஒரு கைப்பிடி அளவு, சுக்கு ஒரு சிறிய துண்டு, சுண்டைக்காய் வற்றல் 15, உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி அளவு, மிளகு ஒரு டீஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, எண்ணெய், உப்பு தேவையான அளவு,
செய்முறை: கடுகு, வேப்பம்பூ, சுண்டைக்காய் வற்றல், சுக்கு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும். பெருங்காயத்தை எண்ணெ யில் பொரிக்கவும். ஆறிய உடன் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும்.
குறிப்பு: பிரசவித்த பெண்களுக்கு, இந்தப் பொடியை சூடான சாதத் தில் சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிடக் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் காக்கும்.
சுண்டைக்காய் வற்றல் குழம்பு
தேவையானவை: சுண்டைக் காய் வற்றல் 20, புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் 2, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தலா கால் டீஸ்பூன், சாம்பார் பொடி 2 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நல்லெண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, சுண்டைக்காய் வற்றல் சேர்த்து வறுத்து, சாம்பார் பொடி சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலையை சேர்க்கவும். பிறகு புளியைக் கரைத்து விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இதற்கு தயிர் பச்சடி, சுட்ட அப்பளம் சிறந்த காம்பி னேஷன். சுண்டைக்காய் வற்றல் குழம்பு பித்தத்தைத் தணிக்கும்.
மாங்காய் வற்றல் குழம்பு
தேவையானவை: உப்பு சேர்த்து காயவைத்த மாங்காய் வற்றல் 6 துண்டுகள், புளி நெல்லிக்காய் அளவு, மிளகு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, தனியா, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் 25 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: மாங்காய் வற்றலை ஊறவைக்கவும், வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகு, காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை போட்டு வறுத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மாங்காய் வற்றலையும் அரைக்கவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு, புளிக் கரைசல் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இந்தக் குழம்பு, வயிற்றுப் புரட்டலில் இருந்து நிவாரணம் அளிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக