புதன், 31 டிசம்பர், 2014

மருத்துவ குண பாத்திரங்கள்


மருத்துவ குணத்தை அளிக்கும் சமையல் பாத்திரங்கள்..!
நேற்றைய பதிவில் உணவை நஞ்சாக மாற்றும் சமையல் பாத்திரங்கள்-என்ற தலைப்பில் வேளியிட பட்ட பதிவில் கருத்துக்கள் அனைத்தும் சமையலுக்கு ஏற்ற பாத்திரங்கள் எவை என அனைவருடைய கேள்வியாக இருந்தது..இந்த பதிவு அதை சரி செய்யும் என நம்புகிறேன்.!
மண் பாத்திரம்

மண்பாத்திரங்களில் சமைக்கும்போது உணவின் மீது வெப்பம் மெதுவாக ஒரே சீராகப் பரவுகிறது. மேலும் மண்பாத்திரங்களில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவியும் காற்றும் உணவில் ஊடுருவி சரியான முறையில் சமைக்க உதவுகின்றன. இதனால் அதில் சமைகும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப் போன்ற தன்மையைப் பெறுகிறது. இதனால் சமைத்த உணவு பல மணி நேரம் கெடாமல் இருக்கும். மண் பாத்திரத்தில் சமைக்கும்போது அதிக எண்ணெய் பயன் படுத்தத் தேவையில்லை. உணவில் உள்ள அமிலத்தனமையைச் சமப்படுத்தும் உப்பு புளிப்பு சுவையுள்ள உணவுகளை சமைக்கும்போது தீங்கான விளைவுகல் எதையும் ஏற்படுத்தாது. மண் பாத்திரங்களை அவ்வப்போது கழுவி வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
இரும்புப் பாத்திரம்
பல காலமாக சமையல் பாத்திரங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டு வரும் இரும்பு சமையலுக்கு ஏற்றது. இதில் சமைக்கும்போது வெப்பம் சீராகப் பரவுவதோடு நீண்ட நேரம் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ளும். கொஞ்சம் இரும்பு சத்து உணவோடு கலந்து உடலில் சேரும். ரத்தசோகையைக் குணப்படுத்தும். ஆனால் துவர்ப்புச் சுவையுடைய பொருட்களை இரும்புக் கடாயில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். இரும்பு துவர்ப்பு சுவையுடன் வினை புரிந்து உணவுப்பொருள் கருப்பு நிறமாக மாறுவதுடன் சுவையும் வேறுபடும். விரைவில் கெட்டு விடவும் வாய்ப்புக்கள் அதிகம் இரும்புப் பாத்திரத்தில் சமைக்கலாமே தவிர அதில் நீண்ட நேரம் உணவை வைக்கக்கூடாது. சமைத்து முடித்தவுடன் அதை வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடுவது நல்லது.
வெண்கலப் பாத்திரம்
வெண்கலப் பாத்திரத்தில் சமைத்து உண்டால் உடல் சோர்வு நீங்கி நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம். இதில் சமைத்தப்பொருட்கல் சீக்கிரத்தில் கெட்டுப்போகாது. ஆனால் வெண்கலப் பாத்திரத்தை சரியாக கழுவி வெய்யிலில் காய வைத்துத்தான் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் நாம் அடுத்த முறை சமைக்கும்போது களிம்புப் படலம் உண்டாகி உண்வின் தன்மையே நச்சாக மாறிவிடும். இதனால் தான் வெண்கலப்ப்பானையில் வைத்த பொங்கல் சில சமயங்களில் நிறம் மாறிவிடுவதைக் காணலாம்.
செம்புப் பாத்திரம்
செம்புப் பாத்திரத்தில் சமைத்த உணவுக்கு பித்த நோய் கண் நோய் சூதக நோய் சுவாசக் கோளாறுகள் போன்ற அனைத்தையும் குணமாக்கும் ஆற்றல் உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருந்தால் அதில் உள்ள நுண்ணுயிரிகள் எல்லாம் நீங்கிவிடும்.

நஞ்சாக மாறும் பாத்திரங்கள்


நஞ்சாக மாற்றும் சமையல் பாத்திரங்கள்---ஒரு எச்சரிக்கை...!
ஈயப் பாத்திரம்
ஈயம் நம் உடலுக்கு உகந்ததல்ல. ஈயப் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டால் வயிறு தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. சளி இருமல் இருப்பவர்கள் ஈயப் பாத்திரத்தில் சமைத்ததைத் தொடர்ந்து சாப்பிட்டால் வயிறு உப்புசம் ஏற்படலாம். ஈயத்துக்கு பதிலாக வெள்ளீயப் பாத்திரங்கள் பயன்படுத்தலாம். நாம் காலங்காலமாக பயன்படுத்தி வந்த ஈயச்சொம்பு என்பது வெள்ளீயத்தினால் செய்யப்பட்டது. இந்தக் கலவைதான் ஈயச்சொம்பில் சமைக்கும் ரசம் நல்ல மணத்துடன் இருப்பதற்கு காரணம்.
பீங்கான் பாத்திரம்
பீங்கானும் காலங்காலமாகப் பயன்பாட்டில் இருப்பதுதான். பீங்கான் சமைப்பதற்கு ஏற்றது என்றாலும் பீங்கான் பாத்திரம் உயர்தரத்தில் ஆனதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். காரணம் மலிவு விலை பீங்கான் அவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் உயர்ந்தபட்ச கொதி நிலையில் உருவாக்கப்படுவது இல்லை. இத்தகைய மலிவு விலை பீங்கான் அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தலாம். ஆனால் அதில் சமைத்தால் உணவில் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் உள்ளது.
அலுமினிய பாத்திரம்
ஒவ்வொரு முறையும் அலுமினியம் பாத்திரத்தைக் கழுவும்போது அதில் கருப்பாக ஒரு கலவை படியும். அலுமினியம்தான் அது. இந்தக் கலவை உணவில் கலந்து உடலிலும் சேர்ந்து மூளையில் உள்ள நியூராங்களை அழிக்கும் ஆபத்து ஏற்படலாம். மேலும் தொடர்ந்து பயன்படுத்தும்போது ஆஸ்துமா காச நோய் போன்ற சுவாசக் கோளாறுகளும் அல்சர் பாதிப்பும் ஏற்படலாம். அலுமினியம் ஒரு கடின உலோகமாக இருப்பதால் அமிலத்தன்மை கொண்ட தக்காளி போன்ற உணவுப் பொருட்களுடன் வினைபுரிந்து உடலுக்குள் எளிதாக சென்று தசை மற்றும் சிறுநீரகங்களில் படிய ஆரம்பிக்கும். அலுமினியத்தைத் தவிர்க்க முடியாதவர்கள் சமையல் முடிந்தவுடன் உணவை வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிடுவது நல்லது.
நான்ஸ்டிக் பாத்திரம்
சமைக்க எளிமையானதாக இருந்தாலும் இதை சூடுபடுத்தும்போது வெளிவரும் PERFLUORINATED COMPOUNDS என்னும் நச்சுப்பொருள் பல்வேறு விதமான உடல் நலக் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதை தவிர்க்க முடியாது என்பவர்கள் அதனை மிதமான சூட்டில் வைத்து சமைப்பது நல்லது.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

அமைதி தரும் உணவுகள்



மனஅமைதி தரும் உணவுகள்

ஃபின்லாந்தில் உள்ள டாம்ப்பெரி பல்கலைக்கழகம் உடல்வலிகளையும் மனக்கவலையுடன் சேர்த்து அகற்றும் அபூர்வ உணவுகள் என இந்த உணவுகளைக் குறிக்கிறது.

அந்த உன்னத உணவுகள்:-

1. கம்பு
2. கேழ்வரகு
3. பால் அல்லது தயிர்
4. வள்ளிக்கிழங்கு
5. முந்திரி
நம்முடைய மூளையில் செரோட்டனின் என்ற இரசாயனப் பொருள் தங்குதடையின்றி சுரந்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை, மகிழ்ச்சியான மனநிலை முதலியன நீடிக்கும். இந்த செரோட்டனின் மூளையில் தயாரிக்க நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம் போதுமான அளவு இருந்தால்தான் முடியும்.
ஆகவே, கேழ்வரகு ரொட்டி, கேழ்வரகு, கஞ்சியும் தினமும் சேர்த்துக் கொள்ளலாம். சீசனின் போது வள்ளிக்கிழங்குகளையும் அவித்துச் சாப்பிடலாம். பகல் உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் இரண்டு பிரட் துண்டுகளுடன் ஒரு கப் பழச்சாறு அருந்தினாலும் மகிழ்ச்சியான மனநிலை நீடிக்கும் தினமும் ஒருவேளையாவது பழச்சாறு அருந்துவதும் மிக முக்கியம்.
மூளையில் செரோட்டனின் போதுமான அளவு இருக்கும் போது "கவலைப்படாதே", எல்லாம் நல்லபடியாக முடியும்", திடீரென்று கோபபப்பட்டு யாருடனும் வலுச்சண்டைக்கு போகாதே", மனஇறுக்கம் இல்லாமல் வாழ்" போன்ற சிந்தனைகளை எழுப்பி நம்மை கட்டுப்படுத்தி வழி நடத்துகிறதாம். அதே நேரத்தில் செரோட்டனின் அளவு மூளையில் குறைவாக இருந்தவர்களிடம் உடனுக்குடன் சண்டை போடும் குணம், மன அழுத்தம், வலுச்சண்டைக்குப் போய் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் குணமும் இருந்தது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தூக்கமின்மையுடன் உணர்ச்சிகளுக்கு உடனுக்குடன் அடிமைப்படும் குணமும் இருப்பவர்கள் மேற்கண்ட ஐந்து உணவுகளையும் தினமும் தவறாமல் சேர்ப்பது நல்லது. இதனால் மனம் பண்பட்டு மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ ஆரம்பிப்பார்கள். இரவில் நன்கு தூங்குவார்கள். இதனால் முதுமையிலும் இளமையான தோற்றத்தையும் பெறுவார்கள்.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

திருவாதிரை களி


திருவாதிரை களி
ஆருத்ரா தரிசனம் அன்று எம்பெருமானுக்கு படைக்க உள்ள களி செய்யும் முறை ( வலைத்தளத்தில் கிடைத்த பதிவு )
களி செய்ய ஆரம்பிக்குமுன் எல்லாப் பொருள்களையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் வேலை கடகடவென முடிந்துவிடும்.
தேவையானவை:
பச்சரிசி_ஒரு கப்
பச்சைப்பருப்பு_1/4 கப்
கடலைப்பருப்பு_ஒரு டீஸ்பூன் (விருப்பமானால்)
வெல்லம்_ஒன்னேகால் கப்
தேங்காய்ப்பூ_ஒன்றிரண்டு டீஸ்பூன்
உப்பு_துளிக்கும் குறைவாக‌
ஏலக்காய்_1
நெய்_1/4 கப்
முந்திரி_10
செய்முறை:
பச்சரிசி,பச்சைப்பருப்பு,கடலைப்பருப்பு மூன்றையும் தனித்தனியாக வெறும் வாணலில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு ஏலக்காயையும் சேர்த்து ரவை பதத்திற்குப் பொடித்துக்கொள்ளவும்.துளி உப்பையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.
களி கிண்டப்போகும் பாத்திரத்தில் 4 கப்புகள் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்குமளவு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.
வெல்லம் கரைந்ததும் தூசு,மண் இல்லாமல் வடித்துவிட்டு மீண்டும் அடுப்பிலேற்றி தீயை மிதாமாக வைத்து லேஸான பாகுப்பதத்திற்கு கொதிக்க விடவும்.
இதற்குள் களிக்கானத் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.அப்போது தேங்காய்ப் பூவைப்போட்டு,பொடித்து வைத்துள்ள ரவையையும் சிறிதுசிறிதாகக் கொட்டிக்கொண்டே கட்டி விடாமல் கிளறவும்.கட்டிகளில்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
ரவையைக் கொட்டிக் கிளறும்போதே வெந்துவிடும்.தீயை மிதமாக்கிக்கொண்டு,வெல்ல நீரை ஊற்றிக் கிண்டிவிட்டு,எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு மூடி வைக்கவும்.
ஒரு கரண்டியில் நெய்விட்டு முந்திரியை வறுத்துக்கொட்டவும்.
மீண்டும் ஒன்றிரண்டு முறை கிளறிக்கொடுக்க பொலபொலவென்று உதிர்ந்துகொள்ளும்.இப்போது சுவையான திருவாதிரைக் களி தயார்.

வியாழன், 25 டிசம்பர், 2014

புதினா குழம்பு



புதினா குழம்பு !!!
கார குழம்பு தெரியும், வற்றல் குழம்பு தெரியும், இது என்ன புதினா குழம்பு....வாருங்கள் தெரிந்துக்கொள்வோம் !!!
என்னென்ன தேவை?

புதினா - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறு துண்டு
திக்கான தேங்காய்ப்பால் - 1 கப்
கடுகு - தாளிக்க
எண்ணெய், உப்பு - தேவைக்கு
எப்படிச் செய்வது?
புதினா இலைகளைச் சுத்தம் செய்யவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்க்கவும். பிறகு புதினா, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு மல்லித்துாள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கலவை நன்றாகக் கொதித்ததும் புளியைக் கரைத்துச் சேர்க்கவும். சுண்டி வரும்போது வெல்லத்தைச் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது, திக்கான தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். இது பரோட்டா, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கும் சாப்பாட்டுக்கும் ஏற்றது.

புதன், 24 டிசம்பர், 2014

காய்கறி வாங்குவது எப்படி?


காய்கறி வாங்குவது எப்படி?
1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய் ,தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்.
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்.
28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்

செவ்வாய், 23 டிசம்பர், 2014

ஐஸ்வர்ய கோலம்.





ஐஸ்வர்ய கோலம்.............

அட்சய திருதியை தினத்தன்று ஐஸ்வர்ய கோலம் போட்டு பூஜை செய்வது நல்லது. இந்த கோல பூஜை மூலம் அனைத்து செல்வங்களும் உள்ள உன்னதமான வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம். ஐஸ்வர்ய கோலம் சக்தியின் ரூபத்தை காட்டுவதோடு மட்டுமின்றி, சிவனின் கோலத்தையும் (காட்சி) நமக்குக் காட்டுகின்ற கோலமாகும். 
வீட்டில் செல்வம் பெருக ஐஸ்வர்ய கோலம்
ஐஸ்வர்ய கோலத்தின் நடுவில் உள்ள நாற்கோணங்களைப் பாருங்கள். மேலும் கீழும் சிவசக்தியாக ஈஸ்வரர் நின்றிருக்க, இருபுறமும் மற்ற இரு மூர்த்திகளான பிரும்பாவும், விஷ்ணுவும் தத்தம் பத்தினிகளுடன் நிற்பதைக் காட்டும் பகுதி அது.

அந்தக் கோலத்தில் உள்ள ஈஸ்வரனின் இதயத்தில், சக்தியின் ஒரு அம்சமான லட்சுமி தேவி அமர்ந்திருந்து பக்தர்களுக்கு ஐஸ்வர்யத்தைத் தருவது என்ற ஐதீகத்தை இந்த கோலம் காட்டுகிறது. பூஜை அறையில் ஐஸ்வர்ய கோலத்தை மாட்டி வைத்து 45 நாட்கள் அதன் முன் நெய் விளக்கேற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒருநாள் கூட இடைவிடாமல் இந்த பூஜையை செய்து முடித்தால், நீங்கள் நினைத்தது நடக்கும். தேய்பிறை போல நம்முடைய பிரச்சினைகள் மறையத் தொடங்கும். பவுர்ணமி அன்று பிரார்த்தனையை ஒரு காகிதத்தில் எழுதி அதை மடித்து வைத்து விட வேண்டும்.

பிரார்த்தனை எழுதி வைக்கப்பட்டுள்ள காகிதத்தினால் ஐஸ்வர்ய கோலத்தை ஒருமுறை தொட்டுவிட்டு, சுவாமி பீடத்தில் ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். அதன்பின் ஒரு நெய்விளக்கை ஏற்றி, ஐஸ்வர்ய கோலத்திற்கு முன் அதைக்காட்டி விட்டு சாமி அறையில் வைத்து விட வேண்டும்.

பிறகு நமக்குத் தெரிந்த லட்சுமி துதியைச் சொல்லி, நம்மால் இயன்ற ஒரு சிறிய நைவேத்தயத்தைச் செய்யலாம். தொடர்ந்து 45 நாட்கள் இவ்வாறே பிரார்த்தனை எழுதப்பட்டுள்ள காகிதத்தால் ஐஸ்வரியக் கோலத்தை ஒருமுறை தொட்டுவிட்டு நெய் விளக்கை ஏற்றி அதை ஐஸ்வர்யக் கோலத்திற்கு முன் காட்டி விட்டு வைத்து விட வேண்டும்.

முடியாத தினங்களில் வேண்டுதல் எழுதி வைக்கப்பட்டுள்ள காகிதம் மாற்றப்படுவதில்லை என்பதால், வீட்டில் உள்ள வேறு எவர் வேண்டுமானாலும் அதைத் தொடர்ந்து செய்யலாம்.

ஆனால் 45 நாட்கள் தொடர்ந்து அதைச் செய்ய வேண்டும். அட்சய திருதியை அன்று இப்பூஜையைச் செய்வது மிகவும் விசேஷம். அன்று மட்டுமோ அல்லது அன்றிருந்து 45 நாட்களுமோ செய்யலாம். இப்படிச் செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும். மகிழ்ச்சி தாண்டவமாடும்.